மனிதர்கள் சுத்தத்தை விரும்புகிறவர்களே!
தேவனுடைய கற்பனைகளையும் தாண்டி வெளிப்புறமாக சுத்தமாக இருக்க பரிசேயர் மற்றும் யூதர்கள் அநேக ஆசாரங்களை கைக்கொண்டார்கள் என்று மாற்கு ஏழாம் அதிகாரத்தில் இயேசு சொல்கிறார் . கிட்டத்தட்ட அவைகள் நாம் கொரோனா காலத்தில் கடைபிடித்த பழக்கங்களை போலவே உள்ளது, மாற்கு 7 வசனம் 3,4-ல் அதைக் காணலாம்.
3)ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்.
4 கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள்.
சுத்தமான பழக்கங்கள் சுத்தமான வீடு என கொண்டு வாழ எல்லோருக்கும் ஆசைதான். அப்படி இருக்கும்போது ஏன் நம்மில் வசிக்க விரும்பும் தேவனுக்கு அந்த விருப்பம் இருக்கக் கூடாது? நாம் அசுத்தமான பாடல்களை கேட்டுக்கொண்டு இவை மிகவும் உன்னதமான உலக அன்பை குறித்தே பாடுகிறது. இதில் தவறில்லை என்று நம்மை தேற்றிக்கொண்டு அதில் லயித்திருக்கலாம். அல்லது, இது என்னுடைய உடல் மட்டுமல்ல தேவனுடைய ஆலயமுமே என உணர்ந்து சுத்தம் காக்கலாம்.
என் அப்பா சோபிதராஜ் ஆவியின் நிறைவைப் பெற மிகவும் வாஞ்சையாய் இருந்தார்கள். தேவனோ, "உன்னிடம் உள்ள சில குறைகளை நீக்கினாலே நான் உன்னை நிரப்பி உன்னுள் தங்க முடியும்" என்றாராம். என் அப்பாவுக்கு தேவன் தன்னிடம் உள்ள எதைக் குறைவு என்று சொல்லுகிறார் என்பதைக் குறித்த குழப்பத்தோடு, "அது என்ன குறை என்று வெளிப்படுத்தும் ஆண்டவரே" என்று கேட்டு தூங்க சென்று விட்டார்கள். இரவில் அவர்களுக்கு ஒரு தரிசனம் வந்தது அதில் அப்பா ஆலயத்தில் இருந்தார்கள். அதில் தூசியும் நூலாம் படையும் இருந்ததாம். அப்பொழுது,"என் மகள்கள் வந்து இப்பொழுது ஒரு பாடலை பாடுவார்கள்" என்று அப்பா சொன்னார்களாம். உடனே இரண்டு பெண் பிள்ளைகள் முன்வந்து அந்த காலத்தின் சினிமா பாடலை பாட ஆரம்பித்து விட்டார்களாம். உடனே என் அப்பா அதிர்ச்சியடைந்து, இது கர்த்தருடைய ஆலயம் இங்கே எப்படி இந்த பாடலை பாடலாம்? என்று சொல்லி அவர்களை அங்கிருந்து துரத்தி விட்டு முழு ஆலயத்தையும் சுத்தம் செய்தார்களாம். மற்றும் அந்த ஆலயம் தான் "தான்" என்பதையும் உணர்ந்து உலக இசையால் என்னை கலங்கப்படுத்த மாட்டேன் என்று சொல்லி தேவனிடம் மன்னிப்பு கேட்டு பரிசுத்த ஆவியின் நிறைவவைப் பெற்று மகிழ்ந்து வல்லமையான ஊழியக்காரனாய் தன் ஊழியத்தை செய்தார்கள்.
கடந்த வாரம் என் சபையில் போதகர் ஐயா இவ்வாறு சொன்னார்கள்: “ நீ சபையில் விசுவாசியாக இருந்தால் பாவத்தை மேற்கொண்டே வாழ வேண்டும்” என்று.
கிறிஸ்துவை, கிறிஸ்தவத்தை,மிஷனரிகளை பிறர் புகழ்கையில் நமக்கு ஆனந்தமே. ஏன் நாமும் தேவனால் புகழப்படும் ஒரு வித்தியாசமான வாழ்க்கையை தெரிந்தெடுக்கக்கூடாது? ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதை தெரிந்தெடுங்கள். தோழியே, சகோதரரே! உங்கள் உடலை தேவனுக்குரிய ஆலயமாக கொடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள இயேசுவே,
எங்களுக்குள் ஆவிக்குரிய நல்ல பழக்கங்களை தாரும். எங்கள் நாவு உம்மைப் பாடட்டும். எங்கள் செவி உம் வார்த்தைகளையே கேட்கட்டும். எங்கள் கண்கள் உம்மையே மணிக்கணக்காக நோக்கட்டும். எங்கள் கைகள் உமக்கு வேலை செய்யட்டும். எங்கள் கால்கள் உமக்காக ஓடட்டும். நீர் எங்களில் தங்கும் படியான வாழ்க்கையை நாங்கள் வாழட்டும்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.
Comments