வேதம் நம்மை மண்பாண்டங்கள் என்கிறது . மண்பாண்டங்களில் ஏதோ ஒரு காரியத்தை ஊற்றி வைப்பது வழக்கம். பெரும்பாலும் தண்ணீர் அதில் இருக்கும். இங்கு தண்ணீருக்கு அடையாளமான பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருப்பதை ஆறு மற்றும் ஏழு வசனங்களில் காணலாம்.
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4 :7
ஒரு கதை உண்டு அதில் விவசாயி ஒருவன் ஓட்டையுள்ள உடைந்த மண்பானையைக் கொண்டு செடிகளுக்கு தண்ணீர் பாய்க்கச் செல்லுவான். அவன் செல்லும் வழியெங்கும் அந்த தண்ணீர் விழுந்து பூச்செடிகளை எழுப்பி இருக்கும். எங்கள் போதகர் இவ்வாறு சொன்னார். ஒரு நதி உண்டு அது செல்லும் இடமெல்லாம் ஆரோக்கியம், பரிசுத்தம் அந்த நதியே ஆவியானவர் என்று.
சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.
எசேக்கியேல் 47:9.
நதியான அவரை நம் மண் பாண்டங்களில் பெற்றிருக்கும் நாம் உடைக்கப்படும் தருணங்களில் அவரையே பாயச் செய்கிறோம். நம் வாழ்வில் அவர் அனுமதிக்கும் வலிகள், வேதனைகள் போன்ற உடைக்கப்படும் தருணங்கள் யாவும் மண்பாண்டங்களாகிய நம்மில் அவர் இருக்கையில் வழியெங்கும் அவர் பாய்ந்து சென்று தண்ணீரையும் ஆரோக்கியத்தை மாறுதலையும் செழிப்பையும் தர அவரால் பயன்படுத்தப்படுகிறது.
மென்மையான ஆவியானவர் தாமே நம்மில் மேலோங்கி இருப்பராக.
அன்புள்ள இயேசுவே,
எங்களுக்குள் வசிக்கும் ஆவியானவர் தாமே எங்களை நிரப்பியாளட்டும். உடைக்கப்படுகையில் எங்கள் சுயமல்ல அவர் வெளிப்படட்டும். நிறைவான அவர் தாமே எங்கள் குறைகளை நீக்கி எங்களை நிரப்பட்டும்.பரிசுத்தமும் ஆரோக்கியமும் செழிப்பும் எங்களில் மற்றும் நாங்கள் போகும் இடங்களில் நிரம்பி வழியட்டும்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே,
ஆமென்.
Comments