நாம் ஒருவரை காணும் போது முதலாவது செய்வது அவர்களை விசாரிப்பது ஆகும். ஒருவர் மருத்துவமனையில் இருந்தால் விசாரிக்கச் செல்லுவோம். ஒருவர் துன்பத்தில் இருந்தால் அவர்களைப் பார்த்து விசாரிக்கச் செல்லுவோம். நவீன காலங்களில் இது மிகவும் குறைந்துவிட்டாலும் நாம் மிகவும் நேசிப்பவருக்கு ஒன்று என்றால் அவர்களை விசாரிக்காமல் இருக்க நம்மால் முடியாது. என் அம்மா கிருபா மேரி ஆராதனைக்கு சென்ற போது கால் வலியோடு சென்று கலந்து கொண்டார்கள். அருகில் ஒரு பெண்மணி வர அவர்களது கணவர் அவர்களுக்கு உட்கார கரிசனையாய் நாற்காலி எடுத்துக் கொடுத்தார்கள். இந்த அழகான தருணத்தை கவனித்த என் தாயாருக்கு வலியில் இருக்கும் தன்னை விசாரிக்க தன் அன்பு கணவர் தன்னுடன் இல்லாததை நினைத்து வருத்தம் வந்துவிட்டது. இதனைப் புரிந்து கொண்ட ஆவியானவர் உடனே அவர்களிடம் 1 பேதுரு 5 7 ஐக் கூறினாராம் "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்". இதை கேட்ட என் அம்மாவுக்கு ஆறுதலும் மனதில் மிகுந்த சமாதானமும் கிடைத்தது. தன் மனது நோக கூடாது என்று ஆவியானவர் உடனடியாக ஓடி வந்து தன்னை தேற்றுவதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆம், நம் ஆண்டவர் எவ்வளவு நல்லவர்!
அன்புக்குரியவர்களே, காலம் எப்படி இருந்தாலும் உறவுகள் எப்படி மாறினாலும் நம் மனம் நோகாது நம்மை ஆறுதல் படுத்தும் விசாரிக்கும் அன்புள்ள ஆவியானவர் நமக்கு உண்டு. உங்கள் பாரங்களை அவரிடம் தெரியப்படுத்துங்கள். அவர் உங்களை ஆறுதல் செய்யட்டும்.
அன்புள்ள இயேசுவே, எங்களை விசாரிக்க,அன்புக்கூர, கூடவே இருக்க ஆறுதல் படுத்த நீர் அனுப்பின பரிசுத்த ஆவியானவர்க்காக நன்றி. அவர் எங்களில் மகிழ்ந்திருக்கும் வண்ணம் எங்கள் வாழ்க்கை இருக்கட்டும். நீரே எங்கள் பங்கும் எங்கள் சுதந்திரமுமாய் இருப்பதற்காக உமக்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.
Comments