முன்னேறுவது, முன் செல்வது, அடுத்த நிலையை அடைவது, ரகசியங்களை அறிவது, தரிசனங்களைப் பெறுவது, வியாக்கியானங்கள் செய்வது, தீர்க்கதரிசனங்கள் உரைப்பது, பிசாசுகளை துரத்துவது, கட்டுகளை உடைப்பது என் ஆவிக்குரிய கிருபைகளை, வரங்களை பெற்று தேவனால் இந்த வாழ்வில் பயன்படுத்தப்படுவது என்பது ஒவ்வொரு ஆவிக்குரிய கிறிஸ்தவனுக்கும் இருக்கும் ஆசையே!
ஆனால், இவைகளைக்குறித்து சிந்திக்கும் நமக்கு "நிற்கும் நிலையில் நிலையாய் இருக்கத் தெரிவதும், ஸ்திரமாக தேவனுக்காய்நிலைத்திருக்கத் தெரிவதும்" அவசியம். தேவன் தாமே இந்த கிருபையே நமக்கு தரட்டும். அவர் தரும் கிருபையை நாம் போக்கடிக்காது காத்துக் கொள்வோம்.
நிலை நிற்காமல் பின் செல்வது பழைய வழிகளுக்கு சென்று கிருபையை போக்கடிக்காமல் தேவன் நமக்கு அருளிய இரட்சிப்பை காத்துக் கொள்வோம்.
இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார்.
யோவான் 9:31ன் படி கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து மெய் சீசராக விடுதலையோடு அவரை சேவிப்போம் சத்தியமே விடுதலையாக்கும் குமாரனே விடுதலை ஆக்குவார்.
ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். யோவான் 8:35
தகப்பன் வீட்டில் நிலைத்திருக்க போகிறது அடிமை (பாவத்திற்கு அடிமையானவன்)அல்ல குமாரனே. இயேசுவைப் பற்றிக் கொண்டு நிலைத்திருப்போம்.
பாவமோ, கோபமோ, எரிச்சலோ எந்த மனிதரோ, வெறுப்போ, பசியோ, தேவைகளோ, நம்பிக்கையின்மையோ, தோல்வியோ, சோர்வோ, அழுத்தமோ, கவலையோ எதுவும் நம்மை பின்தள்ளாதபடி குமாரராய்குமாரராய், எதற்கும் அடிமைப்படாதவராய் நம்மை சத்தியத்தில் காத்துக் கொண்டு நிலைத்திருப்போம்.
அன்புள்ள இயேசுவே,
எந்த பாடுகளும் நெருக்கங்களும் உம்மிடம் இருந்து எங்களை பிரிக்காது காத்துக் கொள்ளும். நீர் எங்களின் சிந்தையாக இருந்து சத்தியத்திலே விடுதலையோடு எங்களை நிறுத்தும்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.
Comments