லூக்கா 3: 22-ல் மிகவும் அழகான வசனத்தை காணலாம்.
பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
இதில் இயேசு பாவம் இல்லாதவராயினும் அவரே தேவனாயினும் உலகில் பிதாவை பிரியப்படுத்த, பரலோகம் தன்னை கண்டு மகிழ நோக்கமாய் இருந்தார். ஆம், நம் அனுதின நடவடிக்கைகளை பரலோகம் பார்க்கிறது. தேவனுக்கேற்றவைகளை செய்ய தன்னை ஒப்புக்கொடுத்த இயேசுவுக்கு பரலோகம் திறக்கப்பட்டது. தேவனால் அவரைப்பார்த்து பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் தன் நேசக்குமாரன் என்றும் தேவன் அவரில் பிரியமாய் இருப்பதையும் தேவனால் கூறாமல் இருக்க இயலவில்லை.
விடிந்தால் வேலை அடைந்தால் வீடு என்று வாழ்வை கழிக்கும் நமக்கு தேவனுடைய அன்புள்ள சத்தத்தை கேட்க, நான் உன்னில் பிரியப்படுகிறேன் என்று சொல்வதைக் கேட்க ஆசைதான். இதற்கு தேவையானது ஒன்றே "தேவனை பிரியப்படுத்த நோக்கமாய் இருப்பது". பரலோகத்தோடு இணைக்கப்படும் அனுபவங்களை பெற்று ஆவியில் பலம் கொண்டு வாழ்வது. இயேசுவைப்போல தேவ சத்தத்தை கேட்பது எவ்வளவு ஊக்கமூட்டுவதாக இருக்கும்! அன்று தொடங்கிய ஊழியத்தை இயேசு சிலுவை மட்டும் செய்து முடித்தார். நமக்குத் தேவை எல்லாம் தேவன் நம் கீழ்ப்படிதலையும், எல்லா நீதிகளையும் நிறைவேற்றுதலையும் கண்டு "பிரியமான பிள்ளையே" என்று அழைக்கும் சத்தத்தைக் கேட்பதே.
மேலும், அன்று ஆவியானவர் புறாவின் ரூபம் கொண்டு இயேசுவின் மேல் இறங்கினார். நம்மை பலப்படுத்துகிற ஆவியானவர் தேவனை நாம் பிரியப்படுத்துகையில் நம்மில் இறங்கி தங்குகிறார்.
அன்புள்ள இயேசுவே,
எல்லா நீதிகளையும் நிறைவேற்ற, தேவனுக்கு கீழ்ப்படிய, தேவனின் அன்பின் சத்தத்தை கேட்க, ஆவியானவர் எங்களின் தங்கி இருக்க, இந்த நாளில் அருள் செய்யும்.
இயேசுவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.
Comments