மாற்கு 9: 17ல் இருந்து 29 வரை உள்ள வசனங்கள் மிகவும் உபத்திரவத்திற்கு உள்ளான ஒரு மகனைக் குறித்து பேசுகிறது. ஊமையானதும் அவனை தீயிலும் தண்ணீரிலும் தள்ளுவதும் சிறு வயது முதல் அவனைக் கொல்லும்படியானதுமான அசுத்தமான ஆவி அவனுள் இருந்தது. இவன் படும் வேதனையைக் கண்ட அவனது தகப்பனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாது ஒரு மனநிலை இருப்பதை காணலாம். தன்மகன் அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து போவதை கண்ட தகப்பனுடைய விசுவாசமும் செத்த நிலையிலேயே இருந்தது.
வெகு கால போராட்டமும் மாறாத அலைக்கழிக்கும் நிலைமைகளும் சோர்வையே அன்றி வேறெதையும் தருவதில்லை!
வசனம் 27ல் அந்த தகப்பன் இயேசுவைக்கண்டபோது அவன் விசுவாசம் எழுப்பப்படவில்லை. நீர் ஏதாகிலும்செய்யக் கூடுமானால் எங்கள் மேல் மனதிறங்கி எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்(வசனம் 22).
தீயிலும் தண்ணீரிலும் கடந்து வந்த எவருக்கும் இந்த தந்தையின் வேதனை நிறைந்த பதிலின் அர்த்தம் புரியும். இயேசு அவனிடம் நீ விசுவாசிக்க கூடுமானால் ஆகும் என்கிறார்(வசனம் 23). அப்பொழுதும் அந்த மனிதன் தன்னில் பலன் கொண்டு விசுவாசத்தால், மாற்றத்தைக்குறித்த நம்பிக்கையால் நிறைய முடியவில்லை மாறாக விசுவாசிக்கிறேன் என்று கூறியும் என் அவிசுவாசம் நீங்குபடி உதவி செய்யும் என்று கண்ணீருடன் சத்தமிட்டு சொன்னான்(வசனம் 24). தன் மகனின் இந்நிலை(இயேசு அவனருகில் இருந்தபோதும்)அவனது நம்பிக்கையையும் செத்துப்போக பண்ணியிருந்தது.
இந்த சூழ்நிலைக்கு விடை தான் என்ன? சில நேரங்களில் இவர்களுக்கு ஜெபிப்பவர்களுக்கு இயேசுவில் உள்ள விசுவாசத்தோடு கூட இவைகளை விரட்டியடிக்க உபவாசம் தேவை. பிறருடைய விடுதலைக்கான ஜெபம், உபவாசம் நம்மிடம் உள்ளதா? ஏன் நாமும் கூட தீயிலும் தண்ணீரிலும் அமிழ்த்தப்படும் வேளையில் விசுவாசம் செத்து போயிருந்தாலும் உபவாசித்தும் ஜெபித்தும் விடுதலையை நாம் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் நிலையை பெலனில்லா மனிதரிடம் சீஷர்களிடம் கொண்டு சென்று விடை இல்லாத போது அது எவ்வளவு கடினமாயினும் நீங்களே ஜெபத்தையும் உபவாசத்தையும் ஆயுதமாக கையில் எடுத்து இயேசுவின் பாதத்தில் அமருங்கள். சோர்வு நீங்கி விடுதலை பெறுங்கள்.
அலைக்கழிப்புகள் ஓயட்டும்!
அன்புள்ள இயேசுவே,
கடினமான தீயிலும் தண்ணீரிலும் விசுவாசம் கொல்லப்படும் பாதையில் உள்ள எங்கள் மீது இரங்கி ஜெபத்தையும் உபவாசத்தையும் இந்த கட்டுகளை உடைக்கும் பலத்தினாலும் எங்களை நிரப்பும். எல்லா சோர்வுகளையும் நீர் நீங்கப்பண்ணுவதற்காக நன்றி. இதைப் போன்று பாதையில் போகும் பிறருடைய கட்டுகளை உடைக்க எங்களை பெலப்படுத்துவதற்காக நன்றி.
இயேசுவின் நாமத்தில் பிதாவே.
ஆமென்.
Comments